Wednesday, September 1, 2010

தேவனின் வார்த்தை



ஒரு பாலத்தின் அருகே அவளுடைய பழக்கடை இருந்தது. தன்னிடம் பழங்கள் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் வராத சமயங்களில் அவள் தனது பைபிளை எடுத்து வாசிப்பது வழக்கம். அவளது விலை மதிக்க முடியாத செல்வம் அது ஒன்றே!

ஒருமுறை ஒரு வாடிக்கையாளர் கேட்டார்."எப்பொழுது பார்த்தாலும் எதை அம்மா வாசித்து கொண்டிருக்கிறீர்கள்?"

"ஐயா,இது கடவுளுடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமம். அதைத்தான் நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்"என்றாள் அவள்.

"ஏனம்மா,இது கடவுளுடைய வார்த்தைகள்தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? யாராவது அப்படிச் சொன்னார்களா?" என்று வாடிக்கையாளர் வியப்போடு கேட்டார்.

"அவரே அப்படிக் கூறியிருக்கிறார் ஐயா" என்றாள் அவள்.

"கடவுள் உங்களோடு தனிப்பட்ட முறையில் பேசி அப்படிச் சொன்னாரா?"

சற்று நேரம் அவள் நிலை தடுமாறினாள்.வேதாகமம் கடவுளுடைய வார்த்தைதான் என நிரூபிக்க வேண்டுமே!
அவள் திடீரென்று வானத்தை அண்ணாந்து பார்த்து சூரியனைச் சுட்டிக்காட்டி, "ஏனய்யா அது சூரியன்தான் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?"என்று கேட்டாள்.

"அது சூரியன்தான் என்று நிரூபிப்பது எளிதான காரியம். அது ஒளியையும் வெப்பத்தையும் அளிக்கிறதே!"என்றார் அவர்.

"உண்மைதான், பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதற்கான நிரூபணமும் இதுதான். அது என் உள்ளத்திற்கு அனலையும், வெளிச்சத்தையும் அளிக்கிறது"என மகிழ்ச்சியோடு பதிலளித்தாள்.


சங்கீதம் 119:105 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

எரேமியா 23:29 என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

நாம் எப்படி இருக்க வேண்டும்?




1. உலகத்தை தினமும் சந்தித்து ஜெயிக்கிற அளவு விசுவாசமும், தைரியமும் உடையவனாயிரு.

2. தேவனோடு அல்லாமல், எதையும் என்னால் தனியாய் செய்ய இயலாது என்ற அளவு பெலவீனத்தோடிரு.

3. உதவி தேவைப்படுபவர்களுக்கு செய்ய தாராளமாயிரு.

4. உனக்குத் தேவைப்படுகிறவற்றில் சிக்கனமாயிரு.

5. எல்லாம் உனக்குத் தெரியாது என்பதை புரியும் அளவு ஞானத்தோடிரு.

6. அற்புதங்களை சந்தேகமின்றி எதிர்பார்க்கிற அளவு தேவன்மேல் அசாத்தியமான நம்பிக்கையுடையவனாயிரு.

7. உன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள தயாராயிரு.

8. மற்றவர்களின் துக்கங்களை பகிர்ந்துகொள்ள ஆயத்தமாயிரு.

9. பாதையை தவறவிட்டு தவிப்பவருக்கு பாதையை காட்டி வழிநடத்துகிற தலைவனாயிரு.

10. உன்னை மனம் நோகவைத்த நபராயிருந்தாலும், அவர் வெற்றி பெறும்போது அவரை பாராட்டுவதில் முதன்மையாயிருந்து மன்னிப்பை பிரதிபலித்துக் காட்டு.

11. தோல்வியடைந்த உன் சகாவை விமர்சிக்கிறதில் உன் வருத்தம்மட்டும் வெளிப்படட்டும் அல்லது விமர்சிப்போரின் பட்டிய லில் உன் பெயரே இடம்பெறாமல் போகட்டும்.

12. நீ எடுத்து வைக்கிற ஒவ்வொரு காலடியிலும் தேவ ஒத் தாசையை நாடுவாயானால், நீ இடறமாட்டாய்.

13. தவறான வழியில் சென்றால் அதனால் வரக்கூடிய முடிவைக் குறித்து நன்கு ஆராய்ந்து பார். அப்பொழுது நீ சரியான வழியில் நடக்கிறவனாய் இருப்பாய்.

14. உன்னை நேசிக்கிறவர்களைமட்டும் நீ நேசியாமல், உன்மேல் அன்பு இல்லாதவர்கள்மேலும் நீ அன்பாயிரு, அன்பற்றவர்களும் மாறக்கூடும்.

15. எல்லாவற்றிற்கும் மேலாக உன் காலடிகள் இயேசு மாதிரியாய் விட்டுச்சென்ற கால்தடத்தில் நடக்கட்டும்.

ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்

ஒரு நாத்திகன்....கடைந்தெடுத்த நாஸ்திகன் மேடையினின்று பிரசங்கிக்கிறான்.

"அவன் பிரசங்கம் செய்தால் பிணம்கூடத் துடிக்கும்" என்று அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள்.

"கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை. மதத் தலைவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக்கொண்ட கட்டுக்கதைகள்" என்று வாசலத் திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான்.

அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள்.

கடைசியாக " கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்" எனச் சொல்லி முடித்து "யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம்" என்றும் அழைத்தான்.

அந்நகரில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த பெரிய குடிகாரன் ஒருவன் - குணப்பட்டு கிறிஸ்தவனானவன் - மேடைமீது ஏறினான்.

தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான்.

"கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே" எனக் கோபங்கொண்டான் நாஸ்திகன்.

பழத்தை உரித்தவன் சுழை சுழையாகத் தின்று கொண்டே பொறு, பொறு தின்று முடித்துவிட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்" என்று சொல்லியவாறு ரசித்துத் தின்றுகொண்டிருந்தான்.

தின்று முடித்த பின்பு நாத்திகனை நோக்கி, "பழம் இனிப்பாய் இருக்கிறதா?" எனக் கேட்டான்.

"பைத்தியக்காரனே, நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா, புளிப்பா என்று எவ்வாறு சொல்லமுடியும்" என்றான் நாஸ்திகன் ஆங்காரத்துடன்.

"கடவுள் நல்லவர் என்பதை நீ ருசித்துப்பார்த்தால் தானே உனக்குத் தெரியும். ருசித்துப் பார்க்காமல் ஏன் உளறுகிறாய்" என்று சொல்லவே ஜனங்கள் கைத்தட்டி ஆரவாரஞ் செய்தார்கள்.

நாஸ்திகன் தலைகுனிந்து போனவன் போனவன் தான்.

சங்கீதம் 34:8
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்

1பேதுரு 2:17
தேவனுக்குப் பயந்திருங்கள்

Tuesday, August 31, 2010

லூக்கா - 23 - 43



தேவனால் எதையும் எப்பொழுதும் செய்யமுடியும்! எந்த வசனமோ அல்லது யாருடைய வார்த்தையோ அல்லது எந்த ஒன்றுமோ அவரை/அவரது செயல்களை கட்டுபடுத்த முடியாது.

வேதத்தை ஆராய்ந்து பார்த்தால் தேவன் தான்சொன்ன பல்வேறு வசனங்களை பல சூழ்நிலைகளை தனது இஸ்டப்படி மாற்றி அனேக காரியங்களை சிலருக்கு நன்மையும் சிலருக்கு மாற்றியும் செய்திருப்பதை அறியமுடியும்.

உதாரணம் 1:

உபாகமம் 23:3 அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.

என்று திட்டவட்டமாக கர்த்தர் தெரிவித்திருந்தும், மோவாபிய இனத்தின் குனசாலி ஸ்திரியாகிய ரூத்தின் கீழ்படிதலிநிமித்தம் தனது கோத்திரத்துக்குள் அனுமதித்ததோடு அவள் பெயர் இயேசுவின் வம்ச அட்டவணையிலும் வரும்படி அருள் செய்திருக்கிறார்

ரூத்
11. ; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.
மத்தேயு 1:5 சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;


உதாரணம் 2

மோசேயின் சகோதரனாகிய ஆரோன் கர்த்தருக்கு ஆசாரியஊழியம் செய்யும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, எடுக்கப்பட்டார்கள். நித்ய ஆசாரிய பட்டம் அவர்களிடமே இருந்தது

யாத்திராகமம் 29:8 பின்பு அவன் குமாரரைச் சேரப்பண்ணி, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நித்திய கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்துவாயாக.


ஆகினும் சாமுவேலின் நாட்களில் ஏலியின் குமாரர்கள் மோசமாக நடந்துகொண்ட போது தேவன் தனது வார்த்தைகளை மாற்றி

I சாமுவேல் 2:30 ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


இதுபோல் தேவன் தனது வார்த்தைகளை மாற்றி செயல்கள் செய்த பல சம்பவங்கள் வேதத்தில் உண்டு. அவர் தேவன்! அவர் விரும்பியதை செய்ய அவருக்கு வல்லமை உண்டு. அவரிடம் யாரும் ஏனென்று கேட்க முடியாது.

யாத்திராகமம் 33:19 எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன்

போன்ற வசனங்களின் அடிப்படையில் எந்தவித முன் அறிவித்தலுமின்றி சிலுவையில் தொங்கிய கள்வனின் கடைசி நேர கீழ்படிதல் மற்றும் மன நிலைகளின் அடிப்படையில் தேவன் ஒரு உன்னதமான இடத்தை அவனுக்கு
கொடுத்தார் என்று எடுத்து கொள்ளலாம்.

மத்தேயு 20:15 என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா?

அவருடையதை அவரது இஸ்டபடி கொடுக்க அவருக்கு அதிகாரம் உண்டு. ஆகினும் அது எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியல்ல நமக்கு சொல்லப்பட்டவை களுக்கு நாம் நிச்சயம் கீழ்படிந்தே ஆகவேண்டும் என்றே நான் கருதுகிறேன்.

ஏன் என்னை கைவிட்டீர்....?



ஏசாயா 53 அதிகாரம்

4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.



5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.


6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.


7. அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.


8. இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.



9. துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.



10. கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.



11. அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.



12. அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.


பிதாவாகிய தேவன் இயேசுவை கைவிட்டார்.........எதற்காக

நாம் செய்த பாவத்துக்கு எப்படி பாவம் இல்லாத ஒரு ஆடு பலியாகிறதோ

ஆம் இந்த பூமியில் பிறந்த அணைத்து மனிதர்களுக்கும் பாவத்தை நீக்க ஒரு பெரிய பலி தேவை

அது மிக பெரிய பலியாய் இருக்க வேண்டும் தேவ துதர்கள் கூட பெரிய பலி என்று கூற முடியாது

ஏனென்றால் கோடான கோடி தேவதுதர்கள் அவரிடம் உண்டு அதனால் தான் தேவன் சொல்ல முடியாத

மிக மிக பெரிய பலியை ( தம்முடைய நேச குமாரனை ) மனிதன் மீது உள்ள அன்பின் நிமித்தம் மனிதன்

செய்த நன்மைக்காக அல்ல மனித செய்த தீமைக்க தம்முடைய குமாரனை பாவத்தை நீக்குகிற பலியாய் ஒப்புகொடுத்தார்

பிதாவாகிய தேவன் அவரை கொள்ள சித்தமானார் என்று வேதம் கூறுகிறது

பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனை கைவிட்டார்.........என்பது உண்மை ( பாவத்தை நீக்குவதற்காக )


அதனால் தான் குற்றம்மில்லாத இயேசு

என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று கூறினார் .

தீமைகள் அனைத்திற்கும் தேவன்தான் காரணமா?



உதாரணம்-1


மனிதர்களாகிய நாம் நல்ல உணவுகளையே உண்கிறோம், நல்ல ஆரோக்கிய நிலையிலேயே இருக்க விரும்பிகிறோம் ஆனால் நாம் கொஞ்சமும் விரும்பாத துர்நாற்றமுள்ள கழிவுகளையும் நமது உடம்பு நம்முடைய அனுமதியின்றி தானாகவே உற்பத்தி செய்கின்றது.

இவ்வித கழிவுகளை உற்பத்தி செய்தது யார் என்று கேட்டால்? பதில் என்ன?
நாம் தான்

ஆனால் அவற்றை வேண்டும் என்றா உற்பத்தி செய்தோம்?
இல்லவே இல்லை ஒரு பொருளில் உள்ள நலமானதை எடுத்தபோது நலமாற்றது தானாகவே கழிவாக உருவாகிவிட்டது.

அவற்றை நாம் விரும்புகிறோமா?
இல்லை அவற்றை வெறுக்கிறோம், அவற்றைவிட்டு விலகி இருக்க விரும்புகிறோம்.

உதாரணம்-2

ஒரு மிகப்பெரிய உரதொழிற்சாலையை எடுத்து கொள்வோம். அத்தொழில்சாலை
தாவரங்களுக்கு தேவையான உரத்தை தயாரிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. அனால் அது செயல்படும்போது சில அசுத்த வாயுக்கள் தானாக உருவாகிறது அவ்வாயுக்களில் சில, மிக உயர்ந்த புகைபோக்கி மூலம் வெளியேற்றப்படுகின்றன. சில வாயுக்கள் கொடியநச்சு கலந்தவையாக இருப்பதால் ஒரு பெரிய உலோக கோளத்துக்குள் அடைத்து வைக்கப்படுகின்றன. அவ்வாயுக்கள் கடந்து செல்லும் இடங்கள் மிகுந்த
எச்சரிக்கையுடன் கையாளப்படுகின்றன.

இங்கு இந்த விஷ வாயுக்களை உருவாக்கியது யார்?
மனிதன்

அதை அவன் விரும்பியா தயாரித்தான்?
இல்லை அவைகள் தானாக உருவாகிவிட்டன

மனிதன் அதை விரும்புகிறானா?
அவற்றை வெறுக்கிறோம் அவற்றின் அருகில் செல்லலகூட விரும்புவதில்லை அவ்வாறு செல்பவர்களையும் எச்சரிக்கிறோம்.

இந்த நிலைதான் இங்கு இறைவனின் நிலையும்!

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார் அது ஒழுங்கின்மயாகவும் வெறுமையாகவும் இருந்தது!

அவற்றை சீர் செய்து, மனிதன் வாழ்வதற்கு ஏற்றதாக மாற்றவேண்டும் என்ற ஒரு உன்னத நோக்கத்தோடு தேவன் செயல்பட்டார்.

எனவே வெளிச்சம் தேவை என்பதை அறிந்து வெளிச்சத்தை உண்டாக்கினார் அவ்வாறு வெளிச்சம் இல்லாத இடம் இருள் என்று பெயர்பெற்றது. (இரண்டையும் உண்டாக்கியவர் தேவனே)

பரிசுத்தமான அனைத்தையும் ஓன்று சேர்த்து ஒரு நன்மையான படைப்பை உருவாகிய போது பரிசுத்தம் இல்லாததும் தீமையும் தானாக பிரிந்தது.(இரண்டையும் உருவாக்கியவர் தேவனே)

தேவன் மனிதர்களுக்கு சமாதானத்தையும் சந்தோசத்தையும் அருளியபோது சமாதானம் இல்லாத இடம் தீமையால் நிறைந்தது. (இரண்டுக்கும் காரணம் தேவனே.)

இங்கு நன்மை தீமை இரண்டையும் உருவாக்கியவர் தேவன்தான். அவர் வேண்டுமென்று விரும்பி தீமையை உருவாக்கவில்லை. நன்மையை ஓன்று சேர்த்தபோது, தீமை தானாக பிரிந்தது, தீமையின் விபரீதத்தை முழுமையாக அறிந்த தேவன் தீமையை வெறுக்கவும் அதை விட்டு விலகி இருக்கவும் வேண்டும் என்று மனிதர்களாகிய நம்மை திரும்ப திரும்ப எச்சரிக்கிறார்

அவரின் எச்சரிக்கையை அலட்சியம் செய்த பிரதான தூதன் பாவத்தில் (தீமையில்) விழுந்தான். அவனை தொடர்ந்து அவனால் மனித குலமும் பாவத்தில் விழுந்தது.

தேவன் மனுக்குலத்தை மீட்க தனது குமாரனை அனுப்பினார். அவர் தீமையை முற்றிலும் அழிக்க வரவில்லை தீமைக்குள் விழுந்த சாத்தானின் தலையை நசுக்கி மனுக்குலத்துக்கு கைகொடுக்கதான் வந்தார்.

எபிரெயர் 2:16 ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்

தீமையை நன்மையாலே வென்றார், கீழ்படியாமையால் வந்த தீமையை கீழ்படிதலால் வென்று, நமக்கு ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தி சென்று

மத்தேயு 8:22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.
லூக்கா 9:59 வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார்
யோவான் 12:26 ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன்

தீமை என்னும் சேற்று பள்ளத்திலிருந்து நம்மை தூக்கி எடுத்த இயேசு "என்னை பின்பற்றி வா" என்று அழைக்கிறார். நாம் எதை பற்றியும் யோசிக்காமல், அவரை பின்பற்றி சென்றாலே தீமையை கடக்கமுடியும்.

மற்றபடி தீமை என்பது தேவனால்தான் உருவானது எனவே அதனுடன் சமாதனம் செய்து கொள்ளலாம், தேவன்தான் எல்லா தீமைக்கும் காரணம், எனவே அவர் எல்லோரையும் நிச்சயம் மீட்டுவிடுவார் என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டு அவரது எச்சரிப்பை அலட்சியம் செய்தால், மீள முடியாத துன்பத்தில் வீழ்வது நிச்சயம்.

பாலியல் இச்சையை பகுத்து ஆராயலாமா?



பணம் என்னும் பயங்கர ஆயுதத்திற்கு அடுத்தால் போல் அனேக மக்களை அடிபணிய வைப்பதற்கு சாத்தான் பயன்படுத்தும் அடுத்த ஆயுதம் "பாலியல் இச்சை" என்றால் மிகையாகாது. எனவே எதிர் பாலினர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்ற தெளிவை பெறுவது இங்கு மிகுந்த அவசியமாகிறது.

ஆதியிலே சர்ப்பமானது ஏவாளை பயன்படுத்திதான் ஆதாமை கவிழ்த்தது. அதே டெக்னிக்கில் இன்றும்
ஆண்களை கவிழ்ப்பதற்கு சாத்தான் அதிகமாக பயன் படுத்துவது "பெண்கள்" தான்.

எதிர் பாலினர் மேலுள்ள இச்சை என்பது மனிதனுக்கு இயல்பாகவே வரக்கூடியது. இவ்விஷயத்தில் பாவத்தில் விழாதபடி பார்த்து நடக்க வேத வசனங்களின் அடிப்படையில் தகுந்த யோசனைகள்.



நீதிமொழிகள் 6:29 பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.


என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப பாலியல் இச்சையில் மாட்டிகொண்டு தவித்தவர்களில் முக்கியமானவன் தாவீது. தேவனை நான்கு அறிந்த தேவனால்
"என் இருதயத்துக்கு ஏற்றவன்" என்று சொல்லப்பட்ட அவனே பத்செபாளிடம் பாவத்தில் விழுந்து படாதபாடு பட்டான்.

II சாமுவேல் 12:10 இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்

அடுத்து


நீதிமொழிகள் 6:26 விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்

என்ற வார்த்தைக்கு ஏற்ப தேவனால் அபூர்வமான நசரேய அபிஷேகத்தை பெற்ற அடுத்த நபரான சிம்சோன் பாலியல் பாவத்தில் சிக்கி வேசியின் மடியில் விழுந்து கண்கள் பிடுங்கப்பட்டு கடைசியில் மாண்டான்

நியாயாதிபதிகள் 16:21 பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.


இன்னும் தன் தங்கையாகிய தாமாரை கற்பழித்து அழிந்துபோன அம்னோன், மீதியானிய ஸ்திரியாகிய கஸ்பியோடு சயனித்து பினெகாசின் கையால் குத்துண்டு செத்த சிம்ரி, சவுலின் மறுமனை யாட்டியை தனதாக்கிகொண்ட அப்னேர், தாவீதின் மருமனயாடிகளோடு சயனித்து மாண்டுபோன அப்சலோம், தன் சகோதரனின் மனைவியை தான் வைத்துகொண்டிருந்து யோவானால் கடிந்து கோள்ளப்பட்ட ஏரோது என்று இவ்வரிசை நீண்டுகொண்டே போகிறது.

இவ்வாறு பலரது உயிரை காவுகொண்டுள்ள இந்த பாலியல் இச்சையை மேற்கொள்ளுவது எப்படி?

உலகில் எல்லோருக்கும் எல்லாமே நல்லதாகவே நடப்பது இல்லை சோதனைகளும் துன்பங்களும் உலகில் வருவது தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரூ நிலையிலும் சில விதி விலக்குகள் எப்போதும் இருக்கத்தான் செய்யம். அப்படிப் பட்டவர்களுக்கு ஆலோசனையாக இதை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

1. மனைவியை இழந்தவர்கள்
2. தீராத நோயால் பாதிக்கப்பட்ட மனைவியை உடையவர்கள்
3. திருமணமாகாதவர்கள்
4 .விவாகரத்து செய்துகொண்டவர்கள்
5. தனது உடம்பை தன்னால் கண்ட்ரோல் பண்ண முடியாதவர்கள்
6. மனைவியை பிரிந்து வேறு இடத்தில் வாழ்பவர்கள்

இவர்கள் போன்ற விதி விலக்கானவர்களுக்கே இந்த ஆலோசனை: இப்படிப்பட்டவர்கள் தாங்கள் எந்த இடத்தில் அதிகம் தவறுதல் அல்லது மீறுதலை சந்திக்க நேரிடுகிறது என்பதை அறிந்து அந்த காரியத்திலிருந்து விடுபட தொடர்ந்து ஜெபிப்பது அவசியம்.


வேறொருவனுக்கு நியமிக்கப்பட்டு நிச்சயதார்த்தம் நடந்து விட்டால் அதன்பின் அந்த பெண்ணை இன்னொருவன் திருமணம் செய்யகூடாது அவளும் பிறன் மனைவி என்ற கோட்டுக்குள் வந்துவிடுகிறாள்.

லேவியராகமம் 19:20 ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து,....... , அவளோடேஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அவர்கள் கொலைசெய்யப்படாமல்

உபாகமம் 22:25 ஒருவனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்தானேயாகில், அவளோடே சயனித்த மனிதன் மாத்திரம் சாகக்கடவன்.


மனைவியை வேசித்தன காரணமன்றி வேறு எக்காரணத்தை கொண்டும் தள்ளிவிட (விவாகரத்துக்கு) வேண்டாம்.

மத்தேயு 5:32 வேசித்தன முகாந்தரத்தினா லொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்

அவ்வாறு மனைவியை தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால் அவன் விபச்சாரம் செய்த பாவத்துக்குள்ளாவான்

லூக்கா 16:18 தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம் பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான்,

முடிந்த அளவு மனைவியை பிரிந்து வேரிடத்தில் போய் தங்கி சம்பாதிக்க விரும்பாதீர்கள். இது கட்டளையல்ல என்றாலும் ஒருவர் விழுவதற்கு வழி ஏற்ப்படுத்தியதுபோலாகும்.

I கொரிந்தியர் 7:5 உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள்.


பல்வேறு காரியங்களினிமித்தம் ஒரு முடிவான நிலைக்கும் வர முடியாதவர்கள் அல்லது பிரச்சனையை தீர்க்க முடியாமல் தவிப்பவர்கள் மேலே சொல்லப்பட்டுள்ள காரியங்களை மீறிவாழ்ந்து தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வதைவிட இன்னொரு திருமணம் செய்துகொண்டு வாழலாம் அதில் எந்த தவறுமே இல்லை என்றே நான் கருதுகிறேன். அனால் இப்படிபட்டவர்கள் போதகராவோ அல்லது எதாவது ஆலோசனை சங்கதலைவர், கண்காணி பதவியிலோ இருக்ககூடாது

I தீமோத்தேயு 3:2 கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.


நான் சொல்லியிருப்பதில் அனேக பழைய ஏற்பாட்டு கட்டளைகள் கலந்திருப்பதை அறியமுடியும். அதெல்லாம் தேவையில்லை என்று நீங்கள் கருதினால் கீழ்க்கண்ட ஒரே கட்டளை உங்களுக்கு போதும்

மத்தேயு 5:28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.


எந்த ஸ்திரியையும் இச்சையோடு பார்க்காதீர்கள். இவ்வாறு உங்களால் இருக்க முடிந்தது என்றால் மேலே சொல்லப்பட்ட எதுவும்மே தேவயில்லை. ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்திலேயே இருக்கிறேன் அது கூடுதல் பரிசுத்த நிலையை போதிக்கிறது அதைமட்டும் நான் கைகொள்வேன் என்று சொல்லிக்கொண்டு எதையுமே செய்யாமல் விழுந்து போகவேண்டாம்.

சாத்தானின் முக்கிய நோக்கம் மனிதனை தேவனின் வார்த்தைகளை ஏதாவது ஒரு வழியில் மீறவைப்பதுதான். மற்றபடி, தேவனின் வார்த்தைகளுக்கு உட்பட்டு செய்யும் எதையும் அவன் கண்டுகொள்ளவே மாட்டான். அதில் பாவமும் இல்லை!