Wednesday, September 1, 2010

தேவனின் வார்த்தை



ஒரு பாலத்தின் அருகே அவளுடைய பழக்கடை இருந்தது. தன்னிடம் பழங்கள் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் வராத சமயங்களில் அவள் தனது பைபிளை எடுத்து வாசிப்பது வழக்கம். அவளது விலை மதிக்க முடியாத செல்வம் அது ஒன்றே!

ஒருமுறை ஒரு வாடிக்கையாளர் கேட்டார்."எப்பொழுது பார்த்தாலும் எதை அம்மா வாசித்து கொண்டிருக்கிறீர்கள்?"

"ஐயா,இது கடவுளுடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமம். அதைத்தான் நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்"என்றாள் அவள்.

"ஏனம்மா,இது கடவுளுடைய வார்த்தைகள்தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? யாராவது அப்படிச் சொன்னார்களா?" என்று வாடிக்கையாளர் வியப்போடு கேட்டார்.

"அவரே அப்படிக் கூறியிருக்கிறார் ஐயா" என்றாள் அவள்.

"கடவுள் உங்களோடு தனிப்பட்ட முறையில் பேசி அப்படிச் சொன்னாரா?"

சற்று நேரம் அவள் நிலை தடுமாறினாள்.வேதாகமம் கடவுளுடைய வார்த்தைதான் என நிரூபிக்க வேண்டுமே!
அவள் திடீரென்று வானத்தை அண்ணாந்து பார்த்து சூரியனைச் சுட்டிக்காட்டி, "ஏனய்யா அது சூரியன்தான் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?"என்று கேட்டாள்.

"அது சூரியன்தான் என்று நிரூபிப்பது எளிதான காரியம். அது ஒளியையும் வெப்பத்தையும் அளிக்கிறதே!"என்றார் அவர்.

"உண்மைதான், பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதற்கான நிரூபணமும் இதுதான். அது என் உள்ளத்திற்கு அனலையும், வெளிச்சத்தையும் அளிக்கிறது"என மகிழ்ச்சியோடு பதிலளித்தாள்.


சங்கீதம் 119:105 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

எரேமியா 23:29 என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

நாம் எப்படி இருக்க வேண்டும்?




1. உலகத்தை தினமும் சந்தித்து ஜெயிக்கிற அளவு விசுவாசமும், தைரியமும் உடையவனாயிரு.

2. தேவனோடு அல்லாமல், எதையும் என்னால் தனியாய் செய்ய இயலாது என்ற அளவு பெலவீனத்தோடிரு.

3. உதவி தேவைப்படுபவர்களுக்கு செய்ய தாராளமாயிரு.

4. உனக்குத் தேவைப்படுகிறவற்றில் சிக்கனமாயிரு.

5. எல்லாம் உனக்குத் தெரியாது என்பதை புரியும் அளவு ஞானத்தோடிரு.

6. அற்புதங்களை சந்தேகமின்றி எதிர்பார்க்கிற அளவு தேவன்மேல் அசாத்தியமான நம்பிக்கையுடையவனாயிரு.

7. உன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள தயாராயிரு.

8. மற்றவர்களின் துக்கங்களை பகிர்ந்துகொள்ள ஆயத்தமாயிரு.

9. பாதையை தவறவிட்டு தவிப்பவருக்கு பாதையை காட்டி வழிநடத்துகிற தலைவனாயிரு.

10. உன்னை மனம் நோகவைத்த நபராயிருந்தாலும், அவர் வெற்றி பெறும்போது அவரை பாராட்டுவதில் முதன்மையாயிருந்து மன்னிப்பை பிரதிபலித்துக் காட்டு.

11. தோல்வியடைந்த உன் சகாவை விமர்சிக்கிறதில் உன் வருத்தம்மட்டும் வெளிப்படட்டும் அல்லது விமர்சிப்போரின் பட்டிய லில் உன் பெயரே இடம்பெறாமல் போகட்டும்.

12. நீ எடுத்து வைக்கிற ஒவ்வொரு காலடியிலும் தேவ ஒத் தாசையை நாடுவாயானால், நீ இடறமாட்டாய்.

13. தவறான வழியில் சென்றால் அதனால் வரக்கூடிய முடிவைக் குறித்து நன்கு ஆராய்ந்து பார். அப்பொழுது நீ சரியான வழியில் நடக்கிறவனாய் இருப்பாய்.

14. உன்னை நேசிக்கிறவர்களைமட்டும் நீ நேசியாமல், உன்மேல் அன்பு இல்லாதவர்கள்மேலும் நீ அன்பாயிரு, அன்பற்றவர்களும் மாறக்கூடும்.

15. எல்லாவற்றிற்கும் மேலாக உன் காலடிகள் இயேசு மாதிரியாய் விட்டுச்சென்ற கால்தடத்தில் நடக்கட்டும்.

ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்

ஒரு நாத்திகன்....கடைந்தெடுத்த நாஸ்திகன் மேடையினின்று பிரசங்கிக்கிறான்.

"அவன் பிரசங்கம் செய்தால் பிணம்கூடத் துடிக்கும்" என்று அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள்.

"கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை. மதத் தலைவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக்கொண்ட கட்டுக்கதைகள்" என்று வாசலத் திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான்.

அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள்.

கடைசியாக " கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்" எனச் சொல்லி முடித்து "யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம்" என்றும் அழைத்தான்.

அந்நகரில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த பெரிய குடிகாரன் ஒருவன் - குணப்பட்டு கிறிஸ்தவனானவன் - மேடைமீது ஏறினான்.

தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான்.

"கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே" எனக் கோபங்கொண்டான் நாஸ்திகன்.

பழத்தை உரித்தவன் சுழை சுழையாகத் தின்று கொண்டே பொறு, பொறு தின்று முடித்துவிட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்" என்று சொல்லியவாறு ரசித்துத் தின்றுகொண்டிருந்தான்.

தின்று முடித்த பின்பு நாத்திகனை நோக்கி, "பழம் இனிப்பாய் இருக்கிறதா?" எனக் கேட்டான்.

"பைத்தியக்காரனே, நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா, புளிப்பா என்று எவ்வாறு சொல்லமுடியும்" என்றான் நாஸ்திகன் ஆங்காரத்துடன்.

"கடவுள் நல்லவர் என்பதை நீ ருசித்துப்பார்த்தால் தானே உனக்குத் தெரியும். ருசித்துப் பார்க்காமல் ஏன் உளறுகிறாய்" என்று சொல்லவே ஜனங்கள் கைத்தட்டி ஆரவாரஞ் செய்தார்கள்.

நாஸ்திகன் தலைகுனிந்து போனவன் போனவன் தான்.

சங்கீதம் 34:8
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்

1பேதுரு 2:17
தேவனுக்குப் பயந்திருங்கள்